2 ஆயிரம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னையில் இதுவரை 32 கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள 33வது தடுப்பூசி முகாமுக்காக ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் வீதம், 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பணிபுரிவதற்காக காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தெற்கு ரெயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் 47 லட்சத்து 97 ஆயிரத்து 719 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதில் இதுவரை 4 லட்சத்து 34 ஆயிரத்து 244 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 43 லட்சத்து 63 ஆயிரத்து 475 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்தி, கொரோனா என்னும் அரக்கனை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *