கஞ்சாவை எடுக்க சென்றபோது போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு: செங்கல்பட்டு அருகே பரபரப்பு
சென்னை, மார்ச் 29: செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். பிரபல ரவுடி மற்றும் கஞ்சா வியாபாரி. இவர் மீது கொலை, கொள்ளை, நாட்டு வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் தான் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார். செங்கல்பட்டில் நேற்று காலை போலீசார் அசோக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் துருவி துருவி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஆப்பூர் வனப்பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாரிடம் அசோக்குமார் தெரிவித்தார். உடனே, தனிப்படை போலீசார் அசோக்குமாரை ஆப்பூர் வனப் பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பதுக்கி வைத்த கஞ்சாவை எடுப்பது போல நடித்த அசோக் குமார் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ேபாலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். இதையடுத்து, தனிப்படை போலீசார் தப்பி ஓடிய ரவுடி அசோக்குமாரின் இடது காலில் முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டனர். பிறகு காயம் அடைந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆப்பூர் காப்பு காட்டில் பிரபல ரவுடி அசோக்குமார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.