ஆராய்ச்சியாளர்களுக்கு ஐ.ஐ.டி .,யில் சிறப்பு முகாம்
சென்னை, சென்னை ஐ.ஐ.டி.,யில் இதுவரை, படித்த மாணவர்களுக்கான வளாக தேர்வுகள் நடந்த நிலையில், தற்போது, நாடு முழுதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 3ம் தேதி வரை நடக்கிறது.
இதன் துவக்க நாளான நேற்று, மகளிருக்கான முகாமாக நடந்தது. இது, வேலைவாய்ப்பு முகாமாக மட்டும் அல்லாமல், அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்களுக்கான உச்சி மாநாடாகவும் நடத்தப்பட்டது.
இதில், 30 சதவீதம் பேர் மனிதநேய துறைகளைச் சேர்ந்தோர் பங்கேற்றுள்ளனர். பெரும் தொழில் துறை நிறுவனங்கள், தங்களுக்கான ஆராய்ச்சியாளர்களை தேர்வு செய்ய முகாமிட்டுள்ளன.
முகாம் துவக்க விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசுகையில், ”தற்சார்பு பாரதம் எனும் மத்திய அரசின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, ஆராய்ச்சியாளர்கள் தீர்வளிக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
நிகழ்வில், உச்சி மாநாட்டின் தலைவராக சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி விவகாரத்துறை ராபின் ரதி, சென்னை ஐ.ஐ.டி., டீன்கள் சத்தியநாராயண கும்மாடி, சாந்தி பவன், மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.