அண்ணா நகர் பெண் போலீசார் கழிப்பறை வசதியின்றி தவிப்பு
அண்ணா நகர், அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில், அண்ணா நகர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. மூன்று தளம் உடைய இந்த கட்டடத்திலேயே, துணை கமிஷனர், உதவி கமிஷனர், போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சைபர் கிரைம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் என, ஏராளமான பிரிவு அலுவலகங்கள் இயங்குகின்றன.
இக்காவல் நிலைய கட்டடத்தில், ஆண்களுக்கு நிகராக பெண் போலீசாரும் பணிபுரிகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காவல் நிலைய கட்டடத்தில், பெண் போலீசாருக்கு போதிய கழிப்பறை வசதியில்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
இதுகுறித்து, பெண் போலீஸ் ஒருவர் கூறியதாவது:
மூன்று தளத்தில் உள்ள இக்கட்டடத்தில், பெண் போலீஸ் அதிகளவில் உள்ளனர். எங்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதி கிடையாது. அனைத்து மகளிர் போலீஸ் பிரிவில் வசதியுள்ளது.
அனைத்து நேரமும் கீழ் தளத்திற்கு சென்று வரமுடியவில்லை. பல நேரங்களில் உதவி கமிஷனரின் கழிப்பறையே பயன்படுத்துகிறோம். அதேபோல், ஓய்வு அறை, உடைமாற்றும் அறைகள் கூட கிடையாது.
துணை கமிஷனர் பெண் அதிகாரியாக இருந்தும், அண்ணா நகரில் இதுபோன்ற நிலை இருப்பது வேதனையாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து பெண் போலீசாருக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.