இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது
மண்ணடி, லிங்கி செட்டி தெருவைச் சேர்ந்தவர் அக்ரம் ஜாவித், 33. அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அவர் மனைவி நிலோபர், 29. இவர்களுக்கு, இரண்டரை வயதில் பாஹிமா என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், 24ம் தேதி மாலை, ரமலான் நோன்பு காரணமாக, குழந்தையை தொட்டிலில் துாங்க வைத்து விட்டு, நிலோபர் அருகேயுள்ள மசூதிக்கு நோன்பு திறக்கும் தொழுகைக்கு சென்றுள்ளார்.
வீட்டில் குழந்தையுடன், அக்ரம் ஜாவித் இருந்துள்ளார். தொழுகை முடிந்து வீடு திரும்பிய நிலோபர், குழந்தையை சென்று பார்த்த போது, பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த நிலோபர், தன் கணவரிடம் கேட்ட போது, தெரியவில்லை என கூறியுள்ளார். உடனடியாக, குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, குழந்தை பாஹிமாவை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக கூறினார். அதை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக, உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை கழுத்து இறுக்கி உயிரிழந்துள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலிருந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கு கடற்கரை போலீசார், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். இதில், குழந்தையின் தந்தை அக்ரம் ஜாவித் மட்டும், முன்னுக்கு முரணாக பதிலளித்துள்ளார்.
தொடர் விசாரணையில், தொட்டிலில் இருந்து இறங்கிய போது, கயிறு கழுத்தில் இறுக்கி இறந்து விட்டதாக கூறினார்.
போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், குழந்தை பாஹிமாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும், மனைவிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக நண்பர் ஒருவருடன் பழக்கம் இருந்து வந்தது. நானும், மனைவியும் கருப்பாக இருக்கும்போது, குழந்தை பாஹிமா மட்டும் வெள்ளையாக இருப்பது குறித்து, அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
அந்த சந்தேகத்தில் தான், குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடினேன் என, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார், நேற்று அக்ரம் ஜாவித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.