சென்னையில் 2 புதிய மின்சார ‘ஏசி ‘ பஸ்கள் இயக்கி சோதனை
சென்னை, சென்னையின் எல்லை விரிவடைந்துள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பயணியர் தேவையை ஈடுகட்டும் வகையில், தனியார் பங்களிப்போடு, சென்னையில் 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
முதல் கட்டமாக, 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்து, தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
சிவப்பு மற்றும் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு மின்சார பேருந்துகளும், தற்போது சாலைகளில் இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எண்ணுாரில் உள்ள அசோக் லேலண்ட் ஆலையில், புதிய மின்சார பேருந்துகளை ஆய்வு செய்து, பயணியர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாநகர போக்குவரத்து கழகம், தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, சென்னையில் 1,100 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம்.
முதல் கட்டமாக, 500 மின்சார பஸ்களை இயக்க, அசோக் லைலாண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகளை, அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். அடுத்த சில வாரங்களில், சென்னையில், ‘ஏசி’ மின்சார பேருந்துகள் இயங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.