குச்சி’ ஊன்றிய ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் அடித்தது ‘லக்’! மேய்ச்சல் புறம் போக்கில் பட்டா என முதல்வர் அறிவிப்பு
சென்னை : ”சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மேய்ச்சல் புறம்போக்கில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது குறித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு மேல் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் நிதியாண்டில், ஐந்து லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என, சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதனால், நீண்ட காலமாக வசிக்கும் தங்களுக்கு பட்டா கிடைக்கும் என, ஆக்கிரமிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதற்கிடையே, ‘2 சென்ட் நிலத்திற்கு மட்டுமே பட்டா வழங்கப்படும்; அதற்கு மேல் ஆக்கிரமித்து வைத்திருந்தால், வழிகாட்டு மதிப்பு அடிப்படையில் பணம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் நிலம் மீட்கப்படும்’ என்ற அரசின் நிபந்தனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருக்கும் இடத்தையும் அரசு பறித்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வீட்டு மனை பட்டா வழங்க ஆய்வுக்கு செல்லும் வருவாய் துறை அதிகாரிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
அதேபோல், ‘கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு, உச்ச வரம்புகளை காரணம் காட்டி, நிலங்களுக்கு பட்டா வழங்க மறுக்க முடியாது’ என, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு தெளிவுப்படுத்தி உள்ளது.
மேலும், ‘தனி நபர்கள் பட்டா கோரும்போது, அதில் குடியிருக்கின்றனரா அல்லது காலி நிலமா என்பதை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை புறநகர் மாவட்டங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின், நேற்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் – அசன் மவுலானா: நீர்நிலை புறம்போக்குகளில் வசிப்போருக்கு பட்டா வழங்க தடை இருப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால், மேய்க்கால், மந்தைவெளி, மேய்ச்சல் புறம்போக்குகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுவதில்லை. சென்னை மாநகரின் உள்ளேயே மேய்ச்சல் புறம்போக்கு உள்ளது. எனவே, அங்கு வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: மேய்ச்சல் புறம்போக்கை வேறு வகையில் பயன்படுத்தக்கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை அரசு எடுப்பதாக இருந்தாலும், அதற்கான மாற்று இடத்தை கொடுத்த பின்னரே எடுக்க முடியும். இதை சரி செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.
அசன் மவுலானா: மாநகருக்குள் மேய்ச்சல் நிலத்திற்கான தேவை இல்லை. இதை நீதிமன்றத்திற்கு தெரிவித்து, இப்பிரச்னைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: அசன் மவுலானா கூறியது உண்மை தான். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.
சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்பிரச்னை உள்ளது. எனவே, இது குறித்து பரிசீலித்து, அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.