கலங்கரை விளக்கம் – ஐகோர்ட், தாம்பரம் – கிண்டி மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ‘டெண்டர்’
சென்னை, கலங்கரை விளக்கம் – உயர்நீதிமன்றம், தாம்பரம் – கிண்டி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான, விரிவான அறிக்கை தயாரிக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரை, 15.46 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரை, 21.76 கி.மீ., திட்டம்; பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வழியாக சுங்குவார்சத்திரம் வரை, 27.9 கி.மீ., துாரம் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கைகள், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்நிலையில், கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வழியாக, உயர்நீதிமன்றம் வரையிலான, 6 கி.மீ., துாரம்; தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலான, 21 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதுஇதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி கிடைக்கும்போது தான், பொது போக்குவரத்து வசதியை மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.
அதற்கேற்ப, சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் வகையில், மேலும் பல இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
அதன்படி, கலங்கரை விளக்கம் – உயர்நீதிமன்றம், தாம்பரம் – கிண்டி மெட்ரோ ரயில் திட்ட விரிவான அறிக்கைக்கு டெண்டர் வெளியிட்டுள்ளோம்.
வழித்தடங்கள், போக்குவரத்து நெரிசல், செலவுகள், ரயில் நிலையங்கள் அமைவிடங்கள் உள்ளிட்ட குறித்து, முழு விபரங்கள் அறிக்கையில் இடம்பெறும்.
இந்த விரிவான அறிக்கை, 90 நாட்களில் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.