நாட்டு வெடிகுண்டு, பட்டாக்கத்தி பறிமுதல் கொலைக்கு பழி வாங்கும் திட்டம் முறியடிப்பு
ஆதம்பாக்கம் கொலைக்கு பழிவாங்க வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு, பெரிய கத்தியை பதுக்கி வைத்திருந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, சேத்துப்பட்டு, எம்.எஸ்.,நகரை சேர்ந்தவர் பார்த்தீபன், 24. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, திருமலை தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
இவரது வீட்டில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்காக நாட்டு வெடிகுண்டு, கத்தி பதுக்கி வைத்திருப்பதாக தெற்கு குற்றப்பிரிவு தனிப்படைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, ஆதம்பாக்கம் விரைந்த தனிப்படை போலீசார், உதவிக் கமிஷனர் முத்துராஜ் தலைமையில், மோப்ப நாய் உதவியுடன் பார்த்தீபன் வீட்டில் தீவிர சோதனை நடத்தி பெரிய கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.
மோப்ப நாய் வீட்டின் பின்புறம் சென்று ஒரு இடத்தில் நின்று குரைத்தது. அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்தபோது, அங்கு நாட்டு வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மணல் நிரப்பிய வாளியில் வெடி குண்டை பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இதையடுத்து, பார்த்தீபனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பார்த்தீபனின் நண்பரான வினித் என்பவர் இதனை கொடுத்து வைத்திருந்தார். வினித்தின் சகோதரர் தனுஷ் என்பவரை கடந்த ஆண்டு சிலர் கொலை செய்துள்ளனர். அவர்களை பழி தீர்க்க, வினித், பார்த்தீபன், ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராபின்சன்,23 மற்றும் மலர்மன்னன், 24 ஆகியோர் சேர்ந்து கொலை திட்டம் தீட்டியதும்.
போலீசார் வினித்தை கண்காணிப்பதால், கத்தி, நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பார்த்தீபனிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், அந்த நாட்டு வெடிகுண்டு, கையெறி குண்டாக பயன்படுத்தும் வகையிலும், தூக்கி எறிந்தால் வெடிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பார்த்தீபன், ராபின்சனை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் படி, வினித், மலர்மன்னனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். நாட்டு வெடிகுண்டை தேடி போலீசார் மோப்ப நாயுடன் தெருவில் வலம் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.