விரைவு ரயிலில் இருந்து வீசிய கஞ்சா மூட்டைகள்
பொன்னேரி:வடமாநிலங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் பயணிக்கின்றன.
அந்த வகையில், நேற்று மதியம், சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவு ரயில், பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடக்கும்போது, ரயிலில் இருந்து மூன்று ‘லக்கேஜ் பேக்’குகள் வெளியில் வீசப்பட்டன.
தண்டவாளம் அருகே விழுந்தவற்றை எடுப்பதற்கு, மர்ம நபர்கள் ஓடி வந்தனர். இரண்டு பேக்குகளை எடுத்துக் கொண்டு, மூன்றாவதை எடுக்க செல்லும்போது, பயணியர் அங்கு சென்றனர். இதனால், இரு பேக்குகளுடன் அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
விட்டு சென்ற ஒரு பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, மீஞ்சூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மீஞ்சூர் போலீசார், இரண்டு பேக் கஞ்சாவுடன் தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வடமாநிலங்களில் இருந்து விரைவு ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
அனுப்பம்பட்டு ரயில் நிலையம் பகுதியில், அவ்வப்போது விரைவு ரயில்களில் இருந்து இதுபோன்ற மர்ம பைகள் துாக்கி வீசப்படுவதாகவும், இவற்றை சேகரிக்க வெளிநபர்கள் இங்கு சுற்றித்திரிகின்றனர்.
ரயில்வே மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, கஞ்சா கடத்தலை தடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.