நெசப்பாக்கம் விநாயகர் கோவில் முன் அகற்றாத சிலையால் பக்தர்கள் அதிருப்தி
நெசப்பாக்கம்:நெசப்பாக்கத்தில், விநாயகர் கோவில் வாசலில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில், பழமையான கிராம கோவிலான வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் முன் நடப்பட்டிருந்த கொடி கம்பத்தில், சுதந்திர தினத்தில் தேசிய கொடியும், பிற நாட்களில் காங்., கட்சி கொடியும் பறக்க விடப்பட்டது.
பின், 1976ம் ஆண்டு சுதந்திர தினத்தில், முன்னாள் முதல்வர்கள் காமராஜர் சிலை, 1993ல் எம்.ஜி.ஆர்., சிலை, 2011ல் அண்ணாதுரை சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில், விநாயகர் கோவில் வளாகத்தில் நவகிரகம், துர்க்கை, முருகன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், சிவன் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அதனால், கோவில் முன் உள்ள தலைவர்கள் சிலை மற்றும் கட்சி கொடி கம்பங்களை அகற்ற, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காமராஜர், அண்ணாதுரை ஆகியோரது சிலைகள் மற்றும் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.
ஆனால், எம்.ஜி.ஆர்., சிலை மட்டும் அகற்றப்படாமல், கோவில் கோபுர வாசலை மறைத்து நிற்கிறது.
இதில் அதிருப்தியடைந்த பக்தர்கள், கோவில் வாசலில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
முறையாக ஆய்வு செய்து, கோவில் முன் உள்ள சிலையை அகற்ற, மாம்பலம் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும், இன்னும் சிலை அகற்றப்படவில்லை.
கோவில் முன் உள்ள சிலையை அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வலுத்துள்ளது.