தனியாருடன் மூன்று ஊராட்சிகளும் கைகோர்த்து… அட்டூழியம்: கழிவுநீர், குப்பை கொட்டி பெரும்பாக்கம் ஏரி சீரழிப்பு

பெரும்பாக்கம்:ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி பெரும்பாக்கம் ஏரி குறுகிவிட்ட நிலையில், தனியார் சிலர் தினமும், 45 லாரிகளில் கழிவுநீரை கொட்டி, நீர்நிலையை நாசப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் போட்டி போடும் வகையில், மூன்று ஊராட்சி நிர்வாகங்களும் குப்பையை கொட்டி, ஏரியை நாசப்படுத்தி வருகின்றன. ஏரியை பாதுகாக்க வேண்டிய நீர்வளத்துறை வேடிக்கை பார்த்து வருகிறது.

பரங்கிமலை ஒன்றியம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளின் எல்லையின் நடுவே அமைந்துள்ளது பெரும்பாக்கம் ஏரி. கடந்த 1960களில் 400 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருந்த இந்த ஏரி, தொடர் ஆக்கிரமிப்பால் தற்போது, 200 ஏக்கராக சுருங்கிவிட்டது. மேலும், ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள இந்த ஏரி, சுற்றுப்புற பகுதிகளின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள நிலையில், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, ஏரியில் கொட்டப்பட்டு வருகிறது.

தவிர, வீடுகளில் லாரிகள் வாயிலாக சேகரிக்கப்படும் கழிவுநீர், பெரும்பாக்கம் ஏரியில் விடப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தினமும் தொடர்வதால், அப்பகுதியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் கூறியதாவது:

மேடவாக்கத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், மேடவாக்கம் – மாம்பாக்கம் சாலை ஓரத்தில், பெரும்பாக்கம் ஏரியை ஒட்டி, 2 ஏக்கர் பரப்பு நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.

இதில், லாரி பழுதுபார்ப்பு கடைகள் மற்றும் லாரி ‘வாட்டர் வாஷ்’ கடைகளுக்கு வாடகை விட்டு சம்பாதிக்கிறார். இதன் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, லாரிகள் வாயிலாக கடைகளுக்கு வினியோகித்து வருகிறார்.

அவருக்கு சொந்தமான மூன்று கழிவுநீர் லாரிகள் வாயிலாக, தினமும் 15 நடையென, 45 லாரி கழிவுநீர், ஏரியில் விடப்படுகிறது. இதனால், ஏரி நீர் மாசடைவதோடு, நிலத்தடி நீர் மாசடையும் சூழல் உள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, தமிழக நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க உறுப்பினர் கூறியதாவது:

குறிப்பிட்ட நபர் மட்டுமல்லாமல், மேடவாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம் ஊராட்சியில் சேகரமாகும் கழிவுநீரும், ஏரி நீர்வரத்து கால்வாயில் விடப்படுகிறது.

ஊராட்சி அலுவலக வளாக தடுப்புச்சுவரில் துளையிட்டு, அதன் வாயிலாக மழைநீர் கால்வாயில், தினமும் 10 லாரி கழிவுநீர் விடப்படுகிறது.

இதனால், முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள ஏரி பெருமளவில் பாதிப்படுகிறது. நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை.

அவர்கள் துணையின்றி, இதுபோன்ற செயல்களை செய்ய இயலாது. காவல் துறையும், இச்செயலுக்கு உடந்தையாக இருக்கிறது.

அதனால், ஏரியில் கழிவுநீர் விடும் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

என்ன செய்றதுன்னே எங்களுக்கு தெரியலை!

அ.தி.மு.க., ஆட்சியில், ஏரிகளை புனரமைக்கும் குடிமராத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், ஏரியை புனரமைக்க முயற்சி நடந்தது. தற்போதைய ஆட்சியில், ஏரிகள் புனரமைப்புக்கு நிதியில்லை என்று கைவிரித்து விட்டனர். நான்கு ஆண்டுகளாக இதே நிலை தொடர்கிறது.

இதனால், பெரும்பாக்கம் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சிகள் கிடப்பில் உள்ளது. இருப்பினும் நிதியை பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பும் நீர்வளத்துறைக்கு கிடைக்காததால், என்ன செய்வது என்று தெரியவில்லை.

– நீர்வளத்துறை அதிகாரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *