ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி சிறப்பு பஸ் , ரயில்கள் அறிவிப்பு
சென்னை, சென்னையில் ஐ.பி.எல்., ‘டி 20’ ஓவர் கிரிக்கெட் போட்டியொட்டி, சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஐ.பி.எல்., ‘டி20’ ஓவர் கிரிக்கெட் போட்டிகள், சென்னை சேப்பாக்கத்தில் இன்று, 28, ஏப்., 11, 25, 30, மே 12ம் தேதிகளில் நடக்கின்றன.
இதையொட்டி, சென்னை கடற்கரை – வேளச்சேரி மேம்பால பாதையில், மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வேளச்சேரியில் இருந்து இரவு 10:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சேப்பாக்கத்திற்கு இரவு 11:25 மணிக்கு செல்லும். அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 11:45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 10:10 மணிக்கு சேப்பாக்கத்தை அடையும். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு வேளச்சேரியை அடையும்.
மற்றொரு சிறப்பு ரயில். சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு வேளச்சேரியை அடையும்.
இந்த சிறப்பு ரயில்கள், பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்துாரிபாய் நகர், கோட்டூர்புரம், பசுமை வழிச்சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகண்ணி அம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பார்க் டவுன், சென்னை கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும், என சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.
சிறப்பு பஸ்கள்
மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திடம் பயணக் கட்டணம் பெற்று கொண்டதன் அடிப்படையில், கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் பயணியர், போட்டி நடக்கும் மூன்று மணி நேரத்துக்கு முன்பும், பின்பும் பேருந்துகளில் இலவசாக பயணிக்கலாம். ஆனால், ‘ஏசி’ பேருந்துகளில் அனுமதி இல்லை.
போட்டிக்கு பின், அண்ணாசதுக்கம், ஓமந்துாரார் மருத்துவமனை, சென்னை பல்கலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அண்ணாசிலை முதல் எம்.ஏ., சிதம்பரம் மைதானம் வரை மினி பேருந்துகளும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.