போலீசார் மீது நாட்டு வெடி வீசியவருக்கு ஆயுள் தண்டனை

பூந்தமல்லி, மயிலாப்பூர், முத்துராமன் தெருவைச் சேர்ந்த பிரேம்சந்த், அவரது உறவினர் தரம்சந்த் ஆகியோருக்கு இடையே, மந்தைவெளி மார்க்கெட்டில் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. தரம்சந்த் தன் ஆதரவாளர்களை அனுப்பி, கடந்த 2001ம் ஆண்டு பிரேம்சந்த் வீட்டில் தகராறு செய்தார்.

மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தகராறை தடுக்க முயன்றனர். அப்போது, தகராறில் ஈடுபட்ட நபர்களில் இருவர், நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில், போலீஸ்காரர்கள் இருவர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய, ஜெகன், சுந்தர், முருகன், சின்ன பூபாலன், உசேன், தரம்சந்த், அப்பு ஆகிய எழு பேரையும், மயிலாப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணையின்போது உசேன், அப்பு ஆகியோர் இறந்துவிட்டனர். சுந்தர், சின்ன பூபாலன், தரம்சந்த் ஆகிய மூவருக்கும், கடந்த 2016ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெகன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார்.

இவ்வழக்கில் மீதமுள்ள முக்கிய குற்றவாளி முருகன் மீது, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், மயிலாப்பூர் போலீசார் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 11,000 ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து முருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *