அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருந்தால் வாய்ப்புகள் பெருகும் * பிரின்ஸ் கல்லுாரி விழாவில் அறிவுரை
சென்னை, சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், கல்லுாரி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வை அருள், கல்லுாரி நாள் உரையாற்றியதாவது:
கல்வியை கற்றுக் கொண்ட மாணவர்கள், அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனால், வாய்ப்புகள் பெருகுதோடு, மதிப்பும் உயரும்.
அமெரிக்காவையே ஆட்டி படைக்கும் திறமை இந்திய மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழக மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியை கவனமாக கற்கவேண்டும் என, அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
தஞ்சை தமிழ் பல்கலையிலும், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஐந்தாண்டு இலக்கிய, இலக்கண படிப்பு உள்ளது. அதை தனியார் கலைக் கல்லுாரிகளிலும் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நடிகர் தம்பி ராமைய்யா பேசிதயாவது:
கலை அறிவியல் கல்லுாரிகளில் படிப்பவர்களின் பெற்றோர், வியர்வை சிந்தி உயர்ப்பவர்கள்தான். எனவே, மாணவ, மாணவியர் சிற்றின்பத்தில் சிக்கும் நேரம், தங்களின் பெற்றோரை ஒரு நிமிடம் நினைத்து பார்க்க வேண்டும்.
மாணவர்கள் முன்னேற கவனிப்பும், உள்வாங்கும் திறமும் அவசியம். அகம், புறம் இரண்டையும் கவனிக்க வேண்டும். பேசி தீர்க்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. எண்ணம் சரியாக இருந்தால் எதுவும் நெரிப்படும். உனக்கு நீ பயந்தால், உனக்கு உலகம் பயப்படும்.
இவ்வாறு பேசினார்.
விழாவில், கல்வி ஊக்கத்தொகை மட்டுமின்றி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் வாசுதேவன், துணை தலைவர்கள் விஷ்ணுகார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் கல்பனா ஆண்டறிக்கை வாசித்தார்.