1.12 லட்சம் ச.மீட்டர் நிலம் ஆக்கிரமிப்பு அடையாறு நீர் வழிப் பாதையில் 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்பு : நதி சீரமைப்பு திட்ட அதிகாரிகள் தகவல்
சென்னை, மார்ச் 22: அடையாறு நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.12 லட்சம் சதுர மீட்டர் நிலத்தில் இதுவரை 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அடையாறு நதி சீரமைப்பு திட்டத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அடையாறு ஆறு தாம்பரம் அடுத்த ஆதனூரில் தொடங்கி மண்ணிவாக்கம், முடிச்சூர், அனகாபுத்தூர், மணப்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்கள் வழியாக 42 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பட்டினப்பாக்கத்தில் கடலில் கலக்கிறது. வடகிழக்கு பகுதிகளில் மழைக்காலங்களில் தென் சென்னையின் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீரை கடலுக்கு கொண்டு செல்லும் மிக முக்கியமான பணியை அடையாறு ஆறு மேற்கொண்டு வருகிறது.
ஆனால், இந்த ஆறு ஆண்டுக்கணக்கில் முறையாக தூர்வாரப்படாததாலும், கரைகள் பலப்படுத்தப்படாததாலும் 2015ல் சென்னை மாநகர் பெருவெள்ளத்தை சந்தித்தபோது, மழைநீர் ஆற்றில் கலக்க வழியின்றி, தென் சென்னை மற்றும் புறநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாகின. இதையடுத்து, அடையாறு ஆற்றை தூர்வார வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. அதன்படி, அடையாறு நதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கடந்த 2023ம் ஆண்டு ரூ.555.46 கோடி நிர்வாக அனுமதி வழங்கி, முக்கிய பணிகளான கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு அகற்றுதல், நதியின் வெள்ள நீர்கொள்ளளவை மேம்படுத்துதல், மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான பணிகள், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரித்தல் மற்றும் நதியின் கரையோர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை நடந்து வருகின்றன.
இச்சீரமைப்பு பணிகள் தொடர்புடைய சார்துறைகளால் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆற்றின் கரையோரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் அகற்றப்பட வேண்டிய 3000 ஆக்கிரமிப்புகள் நீர்வளத்துறை மூலம் அடையாளம் காணப்பட்டது. ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும் குடியிருப்பாளர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமானது. அதன்படி சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள சத்யா நகர் வடக்கில் கிட்டத்தட்ட 171 ஆக்கிரமிப்புகள் சில வாரங்களுக்கு முன்பு நீர்வளத்துறை அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டது.
பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கு சிலர் இடம் பெயர்ந்திருந்தாலும், சிலர் கோட்டூர்புரத்தில் மீள்குடியேற்றம் கோரியதை அடுத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து, அடையாறு நதி மறுசீரமைப்பு திட்டத்தின் அதிகாரிகள் கூறியதாவது: அடையாறு கரையோரங்களில் 10,347 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை பாதியளவு அகற்றப்பட்டுள்ளன. அதன்படி நீதிவழிப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்ட கிட்டதட்ட 1.12 லட்சம் சதுர மீட்டர் நிலத்தில் இதுவரை கிட்டத்தட்ட 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மல்லிகை பூ நகர், ஜாபர்கான்பேட்டை அருகே உள்ள பர்மா காலனி, அன்னை சத்யா நகர், கோட்டூர்புரம் அருகே உள்ள சூர்யா நகர், திடீர் நகர் மற்றும் அனகாபுத்தூர் போன்ற இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டிய பல குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளில் கிட்டத்தட்ட 2.2 ஏக்கர் பரப்பளவு மீட்கப்பட்டது. காலியாக உள்ள நிலத்தில் ஆற்றில் சேரும் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட பயன்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.