11 முறை போலி நகைகளை அடகு வைத்து நுாதன மோசடியில் ஈடுபட்ட முதியவர் கைது
வில்லிவாக்கத்தில், 11 முறை போலி நகைகளை அடக்கு வைத்து, 12.21 லட்சம் ரூபாய் மோசடி செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 51. இவர், அதே பகுதியில் உள்ள, ‘சிட்கோ’ நகர், முதல் பிரதான சாலையில், தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 17ம் தேதி, வெங்கடேசன் கடையில் இருக்கும்போது, வில்லிவாக்கம், செங்குன்றம் சாலையை சேர்ந்த பாஸ்கர், 61, என்பவர், நகைகளை அடகு வைக்க வந்துள்ளார். பல ஆண்டுகளாக, வெங்கடேசனிடம் நகைகளை அடகு வைத்து, பாஸ்கர் பணம் வாங்கி செல்வது வழக்கம்.
அதேபோல் இம்முறையும், 38.5 கிராம் எடையிலான இரண்டு தங்க வளையல்கள் மற்றும் விநாயகர் டாலரை, அடகு வைக்க கொடுத்துள்ளார்.
விநாயகர் டாலரை பார்த்து சந்தேகமடைந்த வெட்கடேசன், அதை சோதித்ததில் போலி என்பது தெரிந்தது. அதேபோல், நகைகளையும் சோதனை செய்துள்ளார்.
அவையும் போலியானவை என தெரிந்து, வெங்கடேசன், ஊழியர்களுடன் சேர்ந்து பாஸ்கரை பிடித்துள்ளார். உடனடியாக வில்லிவாக்கம் போலீசாரை வரவழைத்து, அவரை ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், இம்முறையுடன் சேர்த்து மொத்தம் 11 முறை, போலி நகைகளை வெங்கடேசனிடம் அடகு வைத்து, பாஸ்கர் பணம் பெற்றுச்சென்றது தெரிந்தது.
கவரிங் நகைகளை வாங்கி, அதை அசலான தங்க நகைகள் போல மாற்றி அடகு வைத்ததும், ஏற்கனவே நன்கு தெரிந்தவர் என்பதால், சந்தேகம் ஏற்படாத வகையில், பாஸ்கர் நடந்து கொண்டதும் தெரியவந்தது.
அந்த வகையில், வெங்கடேசனிடம் பல ஆண்டுகளாக ஏமாற்றி போலி நகை விற்று 12.21 லட்சம் ரூபாயை பாஸ்கர் பெற்றுள்ளதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பாஸ்கர் விற்ற அனைத்து நகைகளும் போலியானவை என்பதும், அதில் சில நகைகள் மீட்கப்படாததால், ஏலத்திற்கு சென்றதும் தெரியவந்துள்ளது. இதனால், வெங்கடேசனிடம் வாங்கிச் சென்றோர், நகைகளின் தரம் குறித்து சோதித்துக்கொள்ள வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாஸ்கரை கைது செய்த போலீசார், அவரிமிடருந்து, 30 போலி தங்க நகைகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.