அபாய சங்கிலியை இழுத்ததால் வடமாநில விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்
தண்டையார்பேட்டை: வடமாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் நடுவழியில் நின்றது. சத்தம் கேட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரயில் இன்ஜின் டிரைவர்கள், கார்டு ஆகியோர் ரயில் திடீரென்று நின்றதற்கான காரணம் அறிய ரயில் பெட்டிகளை நோக்கி ஓடினர். மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் யில்வே போலீசாரும் விரைந்து சென்றனர்.
அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் பயணிகளிடம் விசாரித்தனர். அப்போது, பயணிகள் கூறுகையில், ரயில் பெட்டியில் கூட்டம் அலைமோதியது. நீண்டநேரம் நின்றபடி பயணம் செய்த நிலையில், சோர்வு ஏற்பட்டு தூக்க கலக்கத்தில் தவறுதலாக அபாயச் சங்கிலியை இழுத்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் பயணிகளை எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
அனைத்தொடர்ந்து, ரயில் கொருக்குப்பேட்டையில் இருந்து புறப்பட்டு வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக பெங்களூரு நோக்கிச் சென்றது. ரயில் திடீரென்று நடுவழியில் பிரேக் பிடித்து நின்றதால் பயணிகளிடையே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.