தரமணி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு வேண்டும்: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா (காங்கிரஸ்) பேசுகையில், “எனது தொகுதிக்கு உட்பட்ட தரமணி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிதண்ணீர் விநியோகம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். போராட்டங்கள் வெடிக்கும் நிலையில் இருக்கிறது. தரமணி பகுதிக்கே ஒருவாரமாக குடிதண்ணீர் வரவில்லை. ஆகையினால், தயவுகூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “எங்கள் துறையினுடைய அதிகாரிகள் இங்கு இருக்கிறார்கள். உடனடியாக அது சரிசெய்யப்பட்டு விடும்; ஏதாவது குழாய் உடைந்திருக்கும். கோரிக்கையை உடனடியாகக் கவனித்து தண்ணீர் கொடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.