பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பெண் காயம் , வாகனங்கள் சேதம்
அண்ணாநகர்: சூளைமேட்டில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் படுகாயமடைந்தார். வாகனங்கள் சேதமடைந்தன. சூளைமேடு அபித் நகரில் நேற்று முன்தினம் மாலை, சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென தறிகெட்டு ஓடி, அந்த வழியாக சென்ற பெண் மீது மோதி தரதரவென இழுத்து சென்று, சாலையோரம் நிறுத்தி இருந்த 4 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி, அங்குள்ள மெக்கானிக் கடையில் புகுந்து நின்றது. தகவலறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், காயமடைந்த பெண் உள்பட 2 பேரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில், விபத்து ஏற்படுத்தியவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில் (49) என்பதும், சாலையில் சென்று கொண்டிருந்த போது, மாடு குறுக்கே வந்ததால் பற்றத்தில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில் மீது வழக்குபதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். விபத்து தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.