சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு மகளிர் ஆணைய தலைவி பேச்சு

சென்னை,சென்னை மாநில கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று நடந்த உலக மகளிர் தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவியருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் மகளிர் ஆணைய தலைவி குமாரி பேசியதாவது :

நான் இதயம் சார்ந்த மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. என்.சி.சி.,யில் இருந்தபோது பைலட் ஆக வேண்டும் என்று நினைத்தேன். உயரம் குறைந்து இருந்ததால், அதிலும் தகுதி நீக்கம் செய்து விட்டனர். திருமணமானபோது, என் கணவரிடம், ஆறாண்டுகள் படிக்க வேண்டும் என்றேன்.

அவர் சற்றும் யோசிக்காமல் சரி என்றார். வேலைக்கு போக வேண்டும் என்ற போதும் சரி, அரசியலில் ஈடுபட போறேன் என்றபோதும் சரி என் கணவர் எனக்கு ஆதரவு அளித்தார். தற்போது நான் மகளிர் ஆணைய தலைவராக இருப்பதற்கு என் கணவர்தான் காரணம்.

இன்றும் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது பெண்கள் தைரியமாக ஆணையத்திற்கு வந்து புகார் அளிக்கின்றனர்.

அன்று பெண்கள் வரதட்சணை கொடுத்து கொண்டிருந்தனர். தற்போது, தன் மகன் மென்பொறியாளராக இருக்கிறார் அவருக்கு கார் வாங்கி கொடுங்கள் என்று வரதட்சணை கேட்கின்றனர். சைபர் கிரைம் குற்றங்கள் தற்போது அதிகரித்துள்ளது.

மகளிர் பாதுகாப்புக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆட்டோக்களில் கியூஆர் கோடு வசதியை அமல்படுத்தி உள்ளார். தமிழக அரசு சார்பிலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளான ரூஸ்வெல்ட், ராஜராஜன், கல்லுாரி முதல்வர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *