நாய் கடித்த குழந்தைக்கு ஆன்லைனில் திரளும் நிதிe
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பழனி மகன் வெற்றிவேல், 3. நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் வெற்றிவேலை, தெரு நாய் கடித்து குதறியது.
இதில், முகத்தில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோர், உடனடியாக வேலுார் அடுத்த ரத்னகிரி சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு, 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடனடியாக, பணத்தை திரட்ட முடியாமல் தவித்த பழனி குடும்பத்தினருக்கு, பழனியின் மைத்துனர் சண்முகம் உறுதுணையாக இருந்து வருகிறார்.
சண்முகம் அவரது ‘வாட்ஸாப்’ குழுவில், குழந்தையின் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்டு, ‛ஸ்டேட்டஸ்’ வைத்தார். இதை பார்த்த பலரும், தங்களின் குழுக்களில் அந்த தகவலை பதிவு செய்தனர்.
விவசாய கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்க போதிய நிதி வசதி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து பலரும், பழனி மற்றும் சண்முகத்தின் ‘ஜி பே’ எண்ணிற்கு, நேற்று வரை 1.65 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
நாய்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் ப.காயத்ரி கூறியதாவது:
குக்கிராமத்தில் வசிக்கும் எங்களுக்கு, இப்படி ஒரு விபரீதம் நிகழும் என, நாங்கள் நினைத்துகூட பார்க்கவில்லை. வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ள எங்களின் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வசதி இல்லை.
அரசியல் அமைப்போ, சமூக தொண்டு நிறுவனங்களோ இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. தனிநபர்கள் பலரும் உதவிபுரிந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.