சி.பி.சி.எல்.,லுக்கு ரூ. 73 கோடி அபராதம் வாரிய உத்தரவுக்கு தீர்ப்பாயம் தடை
சென்னை, கடந்த 2023 டிச., 4ல், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, மழைநீரில் கலந்த கச்சா எண்ணெய், பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணுார் கடல் பகுதிக்குள் பரவியது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதோடு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில், 2024 அக்., 24ல் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர், ‘தேசிய கடல்சார் ஆய்வு நிறுவன ஆய்வறிக்கையில், 2,569 டன் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு, சி.பி.சி.எல்., நிறுவனம், 73.68 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதை எதிர்த்து, சி.பி.சி.எல்., நிறுவனம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.எல்., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கச்சா எண்ணெய் கசிவு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நியாயமற்றது’ என, வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சுற்றுச்சூழல் இழப்பீடாக சி.பி.சி.எல்., நிறுவனம், 73.68 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற, மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக, 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில், சி.பி.சி.எல்., செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 30க்கு தள்ளி வைத்தனர்.