மின்ட் மணிக்கூண்டு கடிகாரம் ரூ.96 லட்சத்தில் சீரமைப்பு பணி
மின்ட், சென்னை, தங்கசாலையில் 60 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டு கோபுரம் உள்ளது. இதில் உள்ள கடிகாரத்தை, ‘சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி’ என அழைக்கப்படும் கனி அண்டு சன்ஸ் நிறுவனம் உருவாக்கியது. கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும், அலுமினியத்தால் ஆனவை.
இந்த கடிகாரம் பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்ததால், சென்னை மாநகராட்சி 2014 ஜனவரியில், பி.ஆர்., அண்டு சன்ஸ் உடன் இணைந்து, மணிக்கூண்டை புதுப்பித்து இயக்கியது. பின், மீண்டும் மணிக்கூண்டு பழுதானது. இதையடுத்து, இந்த மணிக்கூண்டை, கடந்த 2020ல் மாநகராட்சி சீரமைத்தது. பின் மீண்டும் பழுதானது.
தொடர்ந்து சரிவர இயங்காமல் இருக்கும் இந்த கடிகாரத்தை பழுது பார்த்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறை சார்பில், 96 லட்ச ரூபாய் செலவில், மின்ட் மணிக்கூண்டு புனரமைக்கப்படும் அப்பகுதி அழகுப்படுத்தப்படும் என, மேயர் பிரியா அறிவித்தார். இதையடுத்து, மின்ட் மணிக்கூட்டு பூங்கா சீரமைப்பிற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடக்கிறது.