மீன் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் கிடைக்குமா ? காசிமேடு மீனவர்கள் எதிர்பார்ப்பு
காசிமேடு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், தினசரி 50 டன் சூரை மீன் விற்பனைக்கு வருகிறது. இந்த மீனில், உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய ஒமேகா, 3, 6 மற்றும் 12 ஆகியவை உள்ளன.
ஜப்பான், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ராணுவத்திற்கு மட்டும், தற்போது 85 முதல் 90 சதவீதம் வரை, சூரை மீன் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2022ல் கிலோ 72 ரூபாய்க்கு விற்பனையான சூரை மீன் விலை வீழ்ச்சியடைந்து, தற்போது 63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காசிமேடு சூரை மீன் விற்பனையில் ஈடுபடும் மீனவர் சங்கத்தினர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வரும் வரிசூரை, கேரை, மயில்கோலா, ஏமன் கோலா, கட்டா, திருக்கை, வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன் வகைகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போடவில்லை.
மீன் வகைகளின் விலை அதல பாதாளத்திற்கு செல்லும் நிலையில், படகுகளுக்கான டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மீன் வகைகளுக்கு போதிய விலை கிடைக்காததால், மீனவர்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமலும், விசைப்படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுகிறது.
சில வியாபாரிகளின் சொந்த முயற்சியால் மட்டுமே, வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி நடக்கிறது. மத்திய – மாநில அரசுகள், ஜப்பான், ரஷ்யா, லண்டன், சீனா, வடகொரியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, மீன் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.