மூவர் இறப்புக்கு காரணமான மதுக்கடை இடமாற்றாமல் ‘ டாஸ்மாக் ‘ அதிகாரிகள் அடம்
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில் டைடல் பார்க் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பாதை பணி நடக்கிறது. போக்குவரத்து பாதிக்காமல் இருக்க, சாலையின் குறிப்பிட்ட பகுதி, அணுகு சாலையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இதில், குமரன் நகர் சந்திப்பில், நாவலுார் மற்றும் நுாக்கம்பாளையம் சாலை ஆகிய இரண்டு திசையில் இருந்து வரும் வாகனங்கள், சோழிங்கநல்லுார் நோக்கி செல்வதால், அந்த சந்திப்பில் வழக்கத்தைவிட நெரிசல் அதிகமாக இருக்கிறது.
மேலும், நுாக்கம்பாளையம் சாலையில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்படுவதால், அதற்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு, கனரக வாகனங்கள் அதிகமாக செல்கின்றன.
இதனால், அங்கு நிலவும் நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க, ‘யு – டர்ன்’ அமைக்கப்பட்டது. இருந்தும் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
மெட்ரோ பணிக்காக, சாலையின் அகலத்தை குறைத்ததால், குமரன்நகர் சந்திப்பில் ஒன்றரை மாதத்தில் மூன்று வாலிபர்கள், விபத்தில் சிக்கி பலியாகினர்.
இதற்கு முக்கிய காரணம், இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே, ‘டாஸ்மாக்’ கடை செயல்படுவதுதான் என, போலீசார் புகார் கூறுகின்றனர்.
விபத்து ஏற்படுவதை தடுக்க, இந்த சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தம், அணுகு சாலையோரம் நகர்த்தி வைத்து, சாலையின் அகலத்தை அதிகரிக்க வேண்டும். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, போலீசார், சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முயற்சி எடுக்கின்றன.
ஆனால், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள், இந்த கடையை அகற்றாமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
விபத்தும், போதை நபர்களால் பிரச்னையும் அடிக்கடி நடப்பதால், குமரன்நகர் டாஸ்மாக் கடையை இடம் மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம். நடவடிக்கை தான் இல்லை. இப்போது, மூன்று உயிர்கள் பலியாக, இந்த கடை ஒரு காரணமாக மாறியது. பிரச்னையை உணர்ந்து டாஸ்மாக் நிறுவனம் கடையை இடம் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘டாஸ்மாக் கடையை இடம் மாற்றினால் தான், குமரன் நகர் சந்திப்பில் பணியை வேகமாக முடிக்க முடியும். விபத்துக்கு நாங்களும் பதில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடையை ஏன் மாற்றவில்லை என கேட்டால், அரசியல் தலையீடு என, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர். உயிர் பலியாகாமல் இருக்க, கடையை இடம் மாற்ற உயர் அதிகாரிகள் தலையிட வேண்டும்’ என்றனர்.