சேக்காடு பகுதிக்கு விரைவில் குடிநீர் ‘சப்ளை’ இறுதிக் கட்ட பணிகளில் வாரியம் தீவிரம்
ஆவடி,ஆவடி மாநகராட்சி, சேக்காடு 37வது வார்டில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் அருகே 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தொட்டியும் உள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பயன்பாட்டிற்கு வராமலே பராமரிப்பின்றி வீணாகி வந்தது.
இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகிப்பது குறித்து, தனியார் நிறுவனம் வாயிலாக கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆனால், ஆய்வு முடிவுகள் வெளியாக காலதாமதமானது. இதனால், நீர்த்தேக்க தொட்டிகள் காட்சி பொருளாகவே மாறின. இந்த நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைத்து, சேக்காடு பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய, ஆவடி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதற்காக, 24 லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் மோட்டார் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியை வாரியம் துவங்கி உள்ளது. அதேபோல், குடிநீர் இணைப்பு வழங்கப்படாத 1,600 வீடுகளுக்கு, குழாய் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள், இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீரமைப்பு மற்றும் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்ததும், சேக்காடு பகுதியில் உள்ள 2,350 வீடுகளுக்கு, தனியாக மீட்டர் பொருத்தப்பட்டு, நான்கு நாட்களுக்கு ஒருமுறை 10 லட்சம் லிட்டர் குடிநீர், வாரியம் சார்பில் வினியோகிக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, பல ஆண்டுகள் நீடித்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது.