சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் … ரூ.8,405 கோடி! பற்றாக்குறை ரூ.68.57 கோடியாக குறைப்பு முதியோர் தனிப்பிரிவு உட்பட 62 அறிவிப்புகள்

சென்னை மாநகராட்சிக்கு, 2025 – 26ம் நிதியாண்டுக்கான, 8,404.70 கோடி ரூபாய் பட்ஜெட்டை, வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார். கடந்தாண்டைவிட பற்றாக்குறை நிதி, 68.57 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோருக்கு தனிப்பிரிவு உள்ளிட்ட, 62 அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டார்.

சென்னை மாநகராட்சியின், 2025 – 26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

நிதிநிலை அறிக்கையை, நிலைக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்து பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில், 2025 – 26ம் நிதியாண்டில் வருவாய் வரவு, 5,145.52 கோடி ரூபாயாக இருக்கும். வருவாய் செலவினம், 5,214.09 கோடி ரூபாயாக இருக்கும். மூலதன வரவு, 3,121.65 கோடி ரூபாயாகவும், மூலதன செலவு, 3,190.61 கோடி ரூபாயாகவும் இருக்கும்.

அதன்படி, மொத்த வரவினங்கள், 8,267.17 கோடி ரூபாய்; மொத்த செலவினங்கள், 8,404.70 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி மேயர் பிரியா, பட்ஜெட் தொடர்பாக அறிவிப்புகள் வெளியிட்டார்.

கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில், மேயர் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவை:

 தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் 15,000, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 18,000 ரூபாய் ஊதியத்தில், 141 உடற்கல்வி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த, 2.34 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தினம், 500 ரூபாய் என, பயணப்படி, உணவுப்படியாக, 62.55 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

 பிறப்பு, இறப்பு பதிவேடுகளை பராமரிக்க, ஆவண காப்பகம் மேம்படுத்த, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது

முதியோர் தனிப்பிரிவு

 பி.ஆர்.என்., கார்டன், செம்பியம், துரைப்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நல பிரிவு அமைத்தலுக்கு, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

 சென்னையில் உள்ள, 1.80 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

 புதிதாக கட்டப்பட்ட, 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில், 5 கோடி ரூபாய் மதிப்பில் மின்துாக்கி வசதி ஏற்படுத்தப்படும்

 விபத்துகளில் காயமடையும் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மையம், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

 போக்குவரத்திற்கு இடையூறின்றி சாலைகளை சுத்தம் செய்யும் வகையில், சிறிய அளவிலான 20 வாகனங்கள், 8 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும்

 காற்று மாசை தடுக்க, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, இயற்கை எரிவாயு, மின்சாரம் வாயிலாக இயங்கும் வாகனங்கள் படிப்படியாக கொண்டு வரப்படும்

 வணிக வளாக வாடகைதாரர்கள் இணையதளம் வாயிலாக நேரடியாக வாடகை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்

 மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உணவு மண்டலங்கள், இந்தாண்டு இரண்டு இடங்களில் செயல்படுத்தப்படும்

 171 விளையாட்டு திடல்களில் தற்காலிக பாதுகாவலர்கள் ஒப்பந்த அடிப்படையில், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

 பூங்காக்களில் புத்தக வாசிப்பு மண்டலங்கள் ஏற்படுத்த, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

 மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், 5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

 பூங்காக்களுக்கு வரும் மக்கள் பயன்பெறும் வகையில், மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக, தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையம் அமைக்கப்படும்

திடக்கழிவு மேலாண்மை

 பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், பயோ மைனிங் வாயிலாக மீட்டெடுத்த நிலத்தில், 14 கோடி ரூபாய் மதிப்பில் 50 டன் கொள்ளளவு கொண்ட உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்படும்

 மண்டலங்களில் தலா 10 டன் பிளாஸ்டிக் சிப்பமாக்கல் மையங்கள், 22.25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

 மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படத்த, 42 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

 வாகன போக்குவரத்துள்ள 18 சுரங்கப்பாதைகளில், புதிய டீசல் மோட்டார்கள், மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும். வண்ணங்கள் பூசப்பட்டு, மின் விளக்கு அலங்காரம் ஆகியவை, 14.40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்

 பொதுமக்கள் சேவைகள், கேள்விகள், பதில்கள், புகாரினை கையாளுதல், முகவர் சேவை ஆகியவை வாட்ஸாப் அடிப்படையில், 4.46 கோடி ரூபாய் மதிப்பில் தகவல் தொடர்புகள் உருவாக்கப்படும்

 சிறந்த வாகன போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில், ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்

 குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பையை உடனுக்குடன் அகற்றுவதை கண்காணிக்க 400 எண்ணிக்கையிலான கேமராக்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

 மூன்று வட்டார கமிஷனர் அலுவலகங்களிலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

 மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி, 3 கோடி ரூபாயில் இருந்து, 4 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். அதேபோல், கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதி, 50 லட்சம் ரூபாயில் இருந்து, 60 லட்சமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பற்றாக்குறை குறைந்தது

கடந்தாண்டு, 452.01 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருந்தது. வரி உயர்வால், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் வரவு, வருவாய் செலவினத்தை ஒப்பிடுகையில், 68.57 கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *