துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தண்ணீர் பாட்டிலில் 1.5 கிலோ தங்க பசை கடத்தியவர் கைது: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
மீனம்பாக்கம், மார்ச் 20: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தண்ணீர் பாட்டிலில் 1.5 கிலோ தங்கப்பசை கடத்தியவரை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.23 கோடி மதிப்பிலான தங்கப்பசையை பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் அதிகாலை 2.20 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து துபாய்க்கு சுற்றுலா விசாவில் சென்று வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆடைகளை களைந்து சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், சந்தேகம் தீராத சுங்கத்துறை அதிகாரிகள், அவரது பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை சோதனை செய்தனர். அப்போது தண்ணீர் பாட்டிலின் எடை வழக்கத்தைவிட கூடுதலாக இருந்தது. இதையடுத்து, தண்ணீர் பாட்டிலை உடைத்து பார்த்தபோது, உள்ளே பசை வடிவில் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை வெளியே எடுத்து சோதனை செய்தபோது தங்கபசை என தெரியவந்தது. 1.5 கிலோ தங்கப்பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.23 கோடி. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தங்கப்பசை கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்தவர் தண்ணீர் பாட்டிலின் உள்ளே தங்கப்பசையை கடத்திய சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.