விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி மையங்களை சீரமைத்து தர வேண்டும் : சட்டசபையில் பிரபாகர்ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா (திமுக) பேசியதாவது: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் பட்டா இல்லாத இடங்களுக்கு துறையின் சார்பாக வாடகை தர முடியாது என்று சொல்கிறார்கள். நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு 3 கட்டிடங்களுக்கு நான் வாடகை கொடுத்து கொண்டு இருக்கிறேன். ஆனால், அந்த கட்டிடங்களை இடமாற்றம் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும் போது 3 கிலோ மீட்டர், 4 கிலோ மீட்டர் தள்ளி இடமாற்றம் செய்வதால், குழந்தைகள் அவ்வளவு தூரம் சென்று பயன்பெற முடியாது. ஆகவே, பட்டா இல்லாத இடங்களுக்கும், சென்னையில் முதல்வர் பட்டா கொடுத்து கொண்டிருக்கிறார். பட்டா இல்லாத இடங்களுக்கும் வாடகை தருவார்களா, பழுதடைந்த சில அங்கன்வாடிகளை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், ‘அங்கன்வாடி மையங்கள் தொடங்கும் போது எங்கெங்கே இடம் கிடைத்ததோ, அந்த இடங்களில் தொடங்கப்பட்டது. இப்போது பட்டா இல்லாத இடங்கள், நத்தம் புறம்போக்கு இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு கொஞ்சம் சிரமங்கள் ஏற்படுவது உண்மை தான். சென்னையில் இந்த பிரச்னை அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வாடகையும் கடந்த மாத அரசாணையின்படி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வாடகை கொடுப்பதிலும் பிரச்னை இருப்பதாக கூறுகிறார்கள். இதை இந்த அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்,’ என்றார்.