நீர்நிலைகளில் தொடர்ந்து கழிவுகள் கொட்டி அராஜகம் லாரிகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
சென்னை, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலை 80 அடி அகலம் உடையது. இந்த சாலையை ஒட்டி, சதுப்பு நிலம் அமைந்துள்ளதால், சாலையில் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளது
வேளச்சேரி, தரமணி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதிகளில் வடியும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது.
இந்த சாலையை பராமரிப்பது யார் என, பல ஆண்டுகளாக மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் இடையே, பனிப்போர் நடந்து வருகிறது.
இதன் காரணமாக, சாலையில் கட்டடம், பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற கழிவு கொட்டப்படுகின்றன. அருகில் உள்ள வடிகால், கால்வாய் அவை விழுந்து, நீரோட்டத்தில் தடை ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இங்கு கொட்டும் கழிவால் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது, கழிவுகள் கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்து, கண்காணிப்பு கேமராக்கள் போடப்பட்டன. அதையும் மீறி, கழிவு கொட்டுவது தொடர்கிறது. இதை நிரந்தரமாக தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி மக்கள் வலியுறுத்தினர்.
காவல்துறைக்கு அதிகாரம் வழங்காதது ஏன்?
குப்பை தவிர, கட்டட கழிவை உரிய அனுமதியுடன் கொட்ட, ஒவ்வொரு மண்டலங்களிலும் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு தான் கொட்ட வேண்டும் என, சென்னையில் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வைத்துள்ள உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. எனினும், வடிகால், கால்வாய்களை ஒட்டி மற்றும் சதுப்பு நிலத்தில் கழிவு கொட்டுவது தொடர்கிறது. பல வார்டுகளில், லாரிகளை மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தால், அவர்கள் வழக்குப்பதிவு செய்வதில்லை. மாறாக, ‘நீங்களே அபராதம் விதித்து விடுவித்து கொள்ளுங்கள்’ என, மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக புகார் எழுகிறது. சென்னையின் வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டும் லாரிகள் மீது, அபராதம் விதிக்காமல், பறிமுதல் மற்றும் வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே இந்த குற்றசம்பவங்கள் தடுக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஏற்ப, மாநகராட்சி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம்.