இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேட்டி
பெரம்பூர்: இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திரு.வி.க. நகர் வடக்கு பகுதி சார்பில் பெரம்பூர் கண்ணபிரான் தெரு மற்றும் புளியந்தோப்பு நேரு நகரில் அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இதில் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: சிவகங்கையைச் சேர்ந்த ஓம் குமார் என்பவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு திருச்செந்தூருக்கு சாமி கும்பிட வருகிறார், அப்படி வரும் பொழுது மூத்தோர்கள் செல்லக்கூடிய சிறப்பு வழியில் செல்கிறார், மேலும் குழந்தைகளை பொது வரிசையில் விட்டுவிட்டு மனைவிக்கு பின்னால் மூத்தோர் வரிசையில் தரிசனம் செய்ய சென்று இருக்கிறார். அப்போது மூச்சு திணறல் காரணமாக அவதி அடைவதை அறிந்து கோயிலை சார்ந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருச்செந்தூர் கோயிலில் எந்தவிதமான கூட்ட நெரிசலுக்கும் வழியில்லை. கணவருக்கு சுவாசப் பிரச்னை இருக்கிறது என்று மனைவி கைப்பட காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்து விட்டார். ஏதாவது கிடைக்காதா என்று இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டிருக்கும் எடப்பாடி போன்ற அரசியல்வாதிகள் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
அந்த குடும்பத்தின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். தேவையில்லாமல் அவதூறுகளை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 7.7.2025 அன்று திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருப்பதி போல் திருச்செந்தூரும் விளங்கும். தற்பொழுது குறை சொல்பவர்கள் கூட ஆகா ஓகோ என்று பாராட்டக்கூடிய நிலைமை ஏற்படும். தமிழக பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட். இவ்வாறு அமைச்சர் கூறினார். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தொட்டிலையும் ஆட்டுவோம் பிள்ளையையும் கிள்ளுவோம் என்று எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றனர், இரட்டை வேடம் போடுவதில் அதிமுகவிற்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம், என்றார்.