சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக அரசு நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா : சட்ட சபையில் அரவிந்த் ரமேஷ் எம் எல் ஏ வலியுறுத்தல்
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிகப்படியான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இந்த வட்டாட்சியர் அலுவலகம் இதுவரை தனியார் கட்டிடத்தில் தான் தற்காலிகமாக இயங்கி வருகிகிறது. உத்தண்டி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, ஜலடியன்பேட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் சான்றிதழ் பெறுவதற்கு, பட்டா மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த அலுவலகம் தான் வருகிறார்கள்.
இதனால், இங்குள்ள அதிகாரிகள், பணியாளர்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே, இந்த வட்டாட்சியர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தர வேண்டும். அதே நேரத்தில் சோழிங்நகல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சென்னைக்கு உட்பட்ட பெல்ட் ஏரியா என்ற பகுதிகளுக்கு எல்லாம் நீண்ட நெடுநாட்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்த பெல்ட் ஏரியாக்களில் அரசு நிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு இன்றைக்கு அரசாணை வெளியிட்டிருப்பதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துறை சார்ந்த அமைச்சருக்கும் தொகுதி சார்ந்த மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆனால், அதில் ஒரு குளறுபடி உள்ளது.
2006-2011ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் இருந்த காலத்தில் எப்படி பட்டா வழங்கினார்களோ அதேபோல், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக அரசு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கி அந்த மக்களின் நீண்டகால கனவுகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘தாலுகா அலுவலகத்தை பிரிப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயமாக அதற்கு உரிய நடவடிக்கையை எடுப்போம். தாலுகாக்களை பிரிக்க வேண்டிய அவசியம் இருப்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. நிதிநிலைக்கு ஏற்றார் போல நிச்சயமாக செய்து கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.