முஸ்லிம் குறித்து அவதுாறு தி.மு.க ., பிரமுகர் மீது புகார்
வண்ணாரப்பேட்டை:பழைய வண்ணாரப்பேட்டை, மின்ட் மார்டன் சிட்டியைச் சேர்ந்தவர் ஜலாலுதீன், 48; அ.தி.மு.க., சிறுபான்மையினர் பிரிவு ராயபுரம் மேற்கு பதிவு தலைவர்.
இவர், வண்ணாரப்பேட்டை போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் கடந்த 20 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வில் கட்சி பணியும், மக்கள் பொது நல பணிகளும் செய்து வருகிறேன். கடந்த 14ம் தேதி இரவு, தி.மு.க., சார்பில், வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் வகையிலும், ‘இவர்கள் எச்சை சோறு சாப்பிடுவார்கள்’ என, பொதுவெளியில் இந்திய இறையாண்மை சட்டத்திற்கு எதிராக பேசினார்.
இவரது பேச்சு சட்டம் – ஒழுங்கு பாதிக்கும் வகையில் இருப்பதால், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.