துாய்மை பணியாளர் தற்கொலை தனியார் நிறுவன மேலாளர் கைது
சென்னை;துாய்மை பணியாளர் தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக, தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சுமதி, 37; துாய்மை பணியாளர். அவர், சமீபத்தில், தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சில நாட்கள் கழித்து, ‘எங்களுக்கு பெண் துாய்மை பணியாளர் வேண்டாம். ஆண் பணியாளர் தான் வேண்டும்’ என, தனியார் நிறுவன மனிதவள மேலாளர் பிரீத்தி, 40, கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமதி வேலையை விட்டும் நிறுத்தப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த, 4ம் தேதி, தனியார் நிறுவனம் முன், ‘நான் பணிபுரிந்த நாட்களுக்கு எனக்கு சம்பளம் தர வேண்டும்’ எனக்கூறி, உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
பலத்த காயமடைந்த அவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த, 13ம் தேதி இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, தேனாம்பேட்டை போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்து, டில்லிக்கு சென்று இருந்த பிரீத்தியை, அங்கு சென்று நேற்று கைது செய்தனர்.