ராமாபுரத்தில் தீ விபத்து: 4 கடைகள் தீக்கிரை பல லட்ச மதிப்பிலான பொருட்கள் நாசம்
ராமாபுரம்:ராமாபுரம், திருவள்ளுவர் சாலை கோத்தாரி நகரில் ஏராளமான பர்னிச்சர் கடைகள், பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன.
நேற்று மாலை 5:30 மணியளவில், அப்பகுதியில் உள்ள ஒரு பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் அடுத்தடுத்த நான்கு கடைகளுக்கும் தீ பரவி, கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. சுதாரித்த கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பதறியடித்து வெளியேறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ராமாபுரம், விருகம்பாக்கம், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கே.கே.நகர், தி.நகர், ஜெ.ஜெ.நகர், மதுரவாயல் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த எட்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயை அணைக்கும் நடவடிக்கையில் விரைந்து செயல்பட்டனர். மேலும், 15 தண்ணீர் லாரிகள் தீயணைப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டன.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, உடனடியாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
இந்த விபத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை, பழைய பொருட்கள் கடையில் இருந்த பொருட்கள், பர்னிச்சர் கிடங்கில் இருந்த கட்டில் மெத்தை, சோபா மற்றும் கார் ஷெட்டில் இருந்த ஒரு கார் என, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தென்னை மரம், மாமரம் உட்பட மரம் செடி கொடிகளும் கொழுந்து விட்டு எரிந்தன.
வெப்பத்தின் தாக்கத்தால், அந்த பகுதியில் இருந்த சில வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்தது. தொடர்ந்து மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், இரவு 8:00 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதனால், 10 கி.மீ., துாரம் வரை கரும்புகை சூழ்ந்ததால், கண் எரிச்சல் மூச்சுத் திணறலால் மக்கள் அவதிப்பட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பழைய பொருட்கள் கடையில் வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறி காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்து குறித்து ராமாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.