டீ குடிக்க இறங்கியவரின் காரை கடத்திய நபர் கைது
மதுரவாயல்:திருவள்ளுவர் மாவட்டம் கபிலன் நகர், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார், 38; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மதியம், தன் டாடா சுமோ விக்டா காரில், மதுரவாயல் மாக்கெட்டிற்கு சென்றார்.
பின், வீடு திரும்பும்போது, மதுரவாயல் ஏரிக்கரையில் டீக்கடை அருகே காரை நிறுத்தி, சாவியை எடுக்காமல் டீ குடிக்க சென்றுள்ளார்.
டீ குடித்த விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கார் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், காரை கடத்தியது, மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த அழகர்சாமி, 25, என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், காரை மீட்டனர். தொடர் விசாரணையில், அழகர்சாமி மீது துாத்துக்குடி மற்றும் மதுரை மாவட்ட காவல் நிலையங்களில், மூன்று திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது.