பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை வேறொருவரிடம் விட்டு சென்ற காதல் ஜோடி
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்த சாய்ரா பானு, 36. இவர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, பிறந்து 26 நாட்களே ஆன ஆண் குழந்தையை, வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த 14ம் தேதி கொண்டு சென்றுள்ளார்.
குழந்தை குறித்த முன்னுக்குபின் முரணான தகவலால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சாய்ரா பானுவிடம் விசாரித்தனர்.
அதில், சாய்ரா பானுவின் தங்கை கருவுற்று இருந்ததால், புளியந்தோப்பு, திருவேங்கடம் தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, குமரன் – பிரியங்கா தம்பதி அறிமுகமாகியுள்ளனர். அவர்கள், மொபைல் போன் வாயிலாக சாய்ரா பானுவிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் சாய்ரா பானுவை தொடர்பு கொண்ட குமரன், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், மனைவி சண்டை போட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றதாகவும், அவரை சமாதானம் செய்து அழைத்து வரும் வரை, குழந்தையை பார்த்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு ஒருவழியாக சாய்ரா பானு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதி, குமரன், அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து சென்றுள்ளார். அதன் பின் எந்த தகவலும் இல்லை என, போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நிலை குறைவு ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, இந்த சம்பவம் வெளி வந்துள்ளது.
போலீசார், கொளத்துாரைச் சேர்ந்த குமரன், செங்குன்றத்தைச் சேர்ந்த பிரியங்காவை, நேற்று முன்தினம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், இருவரும் காதலித்து வந்ததாகவும், குழந்தை பிறந்தது இரு வீட்டிற்கும் தெரியாது என்பதால், குழந்தையை சாய்ரா பானுவிடம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். குமரனின் தந்தை முனுசாமி, மருமகள் மற்றும் பேரக்குழந்தையை ஏற்றுக்கொண்டதையடுத்து, போலீசார் காதல் ஜோடியை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.