ஓ.எம். ஆரில் நெரிசலை தீர்க்க 1 கி.மீ., சாலை போதும் 12 கி.மீ., சுற்றி செல்வதை தடுக்கலாம்
சென்னை:ஓ.எம்.ஆர்., நாவலுார், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிவாசிகள், மேடவாக்கம், தாம்பரம் நோக்கி துரித பயணமாக செல்ல, பெரும்பாக்கம் அரசு கல்லுாரி சாலையை, அங்குள்ள பிரதான சாலையுடன் இணைக்க பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை, பெரும்பாக்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 200 ஏக்கர் பரப்பில் 3,500 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 90 சதவீத வீடுகளில் பயனாளிகள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இரண்டு அரசு மருத்துவமனைகள், ஏழு அரசு பள்ளிகள், ஐ.டி.ஐ., அரசு கல்லுாரி மற்றும் பொலினினி, ஆர்மி, டி.எல்.எப்., உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
வாரிய குடியிருப்பு மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, தனி வீடுகள் என, இந்த பகுதியில் 1.60 லட்சம் வீடுகள் உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இவர்கள், மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு, ஓ.எம்.ஆர்., சாலை வழியாக, 12 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. ஓ.எம்.ஆர்., சாலையில், குமரன் நகர், ஆவின் மற்றும் சோழிங்கநல்லுார் சிக்னல்களில், நெரிசல் அதிகமாக இருப்பதால், சோழிங்கநல்லுார் வழியாக தாம்பரம் செல்ல, இரண்டு மணி நேரம் வரை ஆகிறது.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் பாதை பணியால், நெரிசல் கடுமையாக உள்ளது. துரித பயணமாக செல்லும், நுாக்கம்பாளையம் சாலைகளில் லாரிகள் அதிகளவில் செல்வதால், அங்கும் நெரிசல் அதிகரிக்கிறது.
இதனால், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் துவங்கும், பெரும்பாக்கம் அரசு கல்லுாரி சாலையை, பெரும்பாக்கம் பிரதான சாலையுடன் இணைக்கும் வகையில், 2.5 கி.மீ., துாரத்தில், இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதில், 2018ம் ஆண்டு, வாரியம் சார்பில், 6 கோடி ரூபாயில், 1.5 கி.மீ., நீளத்தில், 100 அடி அகலத்தில், கல்லுாரி வரை இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலைக்கு, பெரும்பாக்கம் அரசு கல்லுாரி சாலை என பெயரிடப்பட்டது.
மீதமுள்ள, ஒரு கி.மீ., துாரம் சதுப்பு நிலமாக உள்ளது. அதில், நீரோட்டம் பாதிக்காத வகையில், பாலம் அமைத்து சாலையை இணைக்க வேண்டும்.
இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், 12 கி.மீ., சுற்றிச் செல்வது தடுக்கப்பட்டு, 5 கி.மீ., துார பயணத்தில் மேடவாக்கத்தை அடைய முடியும்.
இதன் வாயிலாக ஓ.எம்.ஆர்., சாலையில் நெரிசல் கணிசமாக குறையும் என, 2019ம் ஆண்டு முதல் பகுதிமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வாரியம் இந்த சாலையை, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. நிதி இல்லாததால், சாலை இணைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த சாலை, நெடுஞ்சாலைத்துறை வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு, 6.15 கோடி ரூபாயில் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால், இணைப்பு சாலைக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்வழிபாதை என்பதால், அதை மூடி சாலை அமைப்பதா அல்லது பாலம் கட்டி சாலையை இணைப்பதா என, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
பெரும்பாக்கம் பிரதான சாலையுடன் இணைத்தால் செலவு குறைவு. மாறாக, எதிர்கால நெரிசலை கருதி, கல்லுாரி சாலை வழியாக, மேடவாக்கத்தில் இருந்து செம்மஞ்சேரி தரைப்பாலம் வரை மேம்பாலமாக அமைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வும் நடந்தது. இதற்கு செலவு அதிகமாகும். நிதிநிலையை பொறுத்து, சாலையை இணைக்கும் வகையில் திட்டமிடப்படும். அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.
50 ஏரிகளின் நீர் வெளியேறும் பகுதி
தென் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக, பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது.பெரும்பாக்கம் அரசு கல்லுாரி சாலையை ஒட்டி, இந்த கால்வாய் உள்ளது. சாலை இணைக்க வேண்டிய பகுதியில் கால்வாய் வளைந்து செல்வதால், நீரோட்டத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலையை இணைக்க வேண்டும். அதற்கு ஏற்ப திட்டமிட்டு வருவதாக, அதிகாரிகள் கூறினர்.