வக்கீலிடம் ரூ.97 லட்சம் மோசடி கோவை வாலிபர் கைது
சென்னை,: ‘சர்வதேச பங்குச் சந்தையில், அதிகம் சம்பாதிக்கலாம்’ எனக்கூறி வழக்கறிஞரிடம், 97 லட்சம் ரூபாய் மோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த, கோவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன், 21ம் தேதி, மதுரையை சேர்ந்த, 45 வயதான வழக்கறிஞருக்கு, ‘வாட்ஸ் அப்’பில், சர்வதேச பங்கு சந்தை முதலீடு தொடர்பாக விளம்பரம் வந்துள்ளது. அதை நம்பி, 97 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன்பின்னரே, மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, www.cybercrime.gov.in இணையதளம் வாயிலாக புகார் பதிவு செய்தார்.
கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவின்படி, மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், திருச்சி, மதுரை, கோவையை சேர்ந்த, சைபர் குற்றவாளிகள் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடந்த டிசம்பரில், திருச்சியை சேர்ந்த ஆறு பேர், மதுரையை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சக்திவடிவேல், 39 என்பவர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
அவரை நேற்று முன் தினம் கைது செய்தனர். இவர், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்த பணத்தை, தன் வங்கி கணக்கில் செலுத்த உதவி செய்துள்ளார். அவர்கள், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்தால், சக்திவடிவேலுக்கு 20,000 ரூபாய் கமிஷன் கொடுத்துள்ளனர். அவரது கூட்டாளியையும், போலீசார் தேடி வருகின்றனர். சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்கில் இருந்த, 38 லட்சம் ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.