பள்ளமான சாலைகளை சீரமைக்காத ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி பகுதி சதுப்பு நிலத்தை ஒட்டி உள்ளது. இங்கு வெள்ள பதிப்பு அதிகம். பத்து ஆண்டுகளாக கழிவுநீர் பிரச்னையால் பகுதிமக்கள் அல்லோலப்படுகின்றனர்.
குறிப்பாக, கோகிலம் நகர், லட்சுமி நகர், டான்சி நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில், கழிவுநீர் வெளியேறுகிறது.
பல தெருக்களில் குடிநீர் குழாய் உடைப்பும் அதிகரித்துள்ளது. குடிநீர், கழிவுநீர் குழாய் சேதமடையும்போது, சீரமைப்பு பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்படுகிறது.
ஆனால், பணி முடிந்தபின், பள்ளத்தை சீரமைப்பதில்லை என புகார் எழுகிறது. சாலை புதுப்பித்து ஆறு மாதமான சாலைகளை சேதப்படுத்துவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளம் தோண்டியபின், சாலை உள்வாங்காத வகையில் சமப்படுத்தி சீரமைக்க 10 நாட்கள் வரை ஆகும். ஆனால், பள்ளம் தோண்டிய அன்று சமப்படுத்தி, தார் அல்லது சிமென்ட் கலவை போடுகின்றனர். அவை, ஒரே நாளில் அரை அடி வரை உள்வாங்குகிறது. குடிநீர் வாரியம் செய்யும் தரமற்ற பணியால், மக்கள் எங்கள் மீது புகார் கூறுகின்றனர். வாரிய உயரதிகாரிகள் தலையிட்டு, முறையாக சாலைகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வாரியம் நியமித்த சில ஒப்பந்த நிறுவனங்கள், பள்ளத்தை முறையாக சீரமைப்பதில்லை என புகார் வருகிறது. அவர்களுக்கு, நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.