குப்பை கொட்டுமிடமாக மாறிய ரங்கநாதபுரம் ஏரி
மேடவாக்கம்:மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநகரில், 80 ஏக்கர் பரப்பளவு உடைய ரங்கநாதபுரம் ஏரி உள்ளது. ஆக்கிரமிப்பில் சிக்கிய இந்த ஏரி, 40 ஏக்கராக குறைந்துள்ளது..
மேடவாக்கம், விஜயநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக ஏரியில் கலந்து மாசடைந்து வருகிறது.
ஏரியில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டும், ஆகாய தாமரை வளர்ந்ததும் மோசமான நிலையில் உள்ளது.
இந்த ஏரியை ஆக்கிரமித்து, ஐந்து ஆண்டுகளாக மீன்கடைகள் நடத்தப்படுகின்றன. மீன் கழிவும் ஏரியில்தான் கொட்டப்படுகிறது.
இதனால், இந்த ஏரி கழிவுநீர் மற்றும் கழிவு சேகரிப்பு மையமாக மாறிவிட்டது.
இதனால், கொசு உற்பத்தி, துர்நாற்றம் அதிகரித்து, சுற்றுப்புற பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.
எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள், ஏரியை உடனே சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.