30 ஆண்டு சாலை பிரச்னைக்கு தீர்வு பாரதியார் தெருவாசிகள் மகிழ்ச்சி
திருநின்றவூர்,:திருநின்றவூர் நகராட்சி, 26வது வார்டு, சரஸ்வதி நகர் விரிவு பகுதியில், பாரதியார் தெருவில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த 30 ஆண்டுகளாக சாலை, வடிகால் என, எந்த அடிப்படை வசதியும் இல்லை. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம், மேற்கண்ட குடியிருப்பு பகுதியை சுற்றி தேங்கி நிற்பது வாடிக்கை.
அதேபோல், சாலை மண் தரையாக இருப்பதால், ஒவ்வொரு மழைக்கும் வெள்ளம் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் இடறி விழுந்து, விபத்துகளில் சிக்கினர். ஒவ்வொரு மழைக்கும், பகுதிவாசிகள் சொந்த செலவில், கட்டட கழிவு கொட்டி சமன் செய்து வந்தனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன் தார்ச்சாலை போட ஜல்லி கொட்டப்பட்டது. அதன்பின் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து நம் நாளிதழில், கடந்த ஜனவரி மாதம் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இரு தினங்களுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டது.
ரயில்வே ஸ்டேஷன் சாலை
*ஆவடி அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையம் பின்புறம் ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளது. தண்டுரை, கோபாலபுரம், சேக்காடு வழியாக ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். பல மாதங்களாக குண்டும் குழியுமாக, போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் காட்சியளித்தது.
கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள், பெரிதாகி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து பகுதிவாசிகள் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்தும், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, சில தினங்களுக்கு முன் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.
சாலை பிரச்னை வெளி கொண்டு வந்து தீர்வு காண வழிவகை செய்த ‘தினமலர்’ நாளிதழுக்கு, பகுதிவாசிகள் நன்றி தெரிவித்தனர்.