கேளிக்கை பூங்காக்களை கண்காணிப்பது அவசியம்
கானத்துார், இ.சி.ஆர்., கானத்துாரில் எம்.ஜி.எம்., என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. நேற்று முன்தினம், கப்பல் ஊஞ்சலில் 10க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர்.
அப்போது, தொழில்நுட்பக் கோளாறால் ஊஞ்சலில் அதிர்வு ஏற்பட்டது. இதனால், அங்கிருந்தவர் வெளியேறினர். இதை, கீழே நின்ற பொதுமக்கள் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாததால், யாரும் புகார் தரவில்லை என, கானத்துார் போலீசார் கூறினர்.
கடந்த 3ம் தேதி, வி.ஜி.பி., கேளிக்கை பூங்காவில், விளையாடிய 6 வயது சிறுவன் காயமடைந்தான். அச்சம் ஏற்படுத்தாத வகையில், கேளிக்கை பூங்காக்களை முறையாக கண்காணித்து, பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறினர்.