தி.நகரில் பெண் பழ வியாபாரியை கொல்ல முயன்ற நால்வருக்கு சிறை
சென்னை, தி.நகர், எஸ்.பி., கார்டன் பகுதியில் வசிப்பவர் அல்லி, 52. இவர், தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதையில், தள்ளுவண்டி பழக்கடை நடத்தி வருகிறார்
வழக்கம் போல, கடந்த 2023 மே 1ல், பழ வியாபாரத்தில் அல்லி ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த சிலர், பழங்களை சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட பழங்களுக்கு பணம் கேட்டபோது, தள்ளுவண்டியை சேதப்படுத்திய அவர்கள், அல்லியிடமிருந்து 1,000 ரூபாயையும் எடுத்து சென்றனர்.
மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அல்லியை வெட்ட முயன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, சவுந்தரபாண்டியனார் மார்க்கெட் காவல் நிலையத்தில் அல்லி புகார் அளித்தார்.
விசாரணையில், அல்லியின் கணவர் அய்யனார் வாங்கிய பணத்தை கேட்டும், அவர் எங்கே என கேட்டும் தகராறு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழங்குப்பதிவு செய்த போலீசார், பள்ளிக்கரணையை சேர்ந்த வெங்கடேசன், 35, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன், 38, மணிவண்ணன், 40, மற்றும் வினோத், 31, ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, 19 கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் நால்வருக்கும் தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.