அதிகாரிகள் மாற்றத்தில் அவசரம் பட்டியல் தயாரிப்பில் குளறுபடி
சென்னை மாநகராட்சியில், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஒரே வார்டில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் பணியாற்றும் நிலை தொடர்கிறது.
இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு, தங்களால் சரியாக பணியாற்ற முடியவில்லை என, அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், ஒரே இடத்தில் பணி தொடர்வதால், சுகாதார அலுவலர்களின் ஆதிக்கம் அதிகரித்து, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி வெளிவந்த சில மணி நேரங்களிலேயே, 101 சுகாதார ஆய்வாளர்கள் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு, உடனடியாக பணியிட மாறுதல் வழங்கும் ஆணை வெளியிடப்பட்டது.
அவசர கதியில் நடந்த பணியிட மாறுதலால், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட மண்டலங்களில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களின் ஏழு பேர், பணி ஒதுக்கீடு பட்டியலில் விடுபட்டுள்ளனர்.
அவர்கள் பணியாற்றிய இடங்களுக்கு, மற்றொரு சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அவசரகதியில் பணியிட மாறுதல் நடந்ததால், இந்த தவறு நடந்துள்ளது. அவர்களுக்கு முறையாக பணி ஒதுக்கீடு செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளர். அதே போல், சுகாதார அலுவலர்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.