மின்சாரம் பாய்ந்த மகனை காப்பாற்றிய தந்தை உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் பகுதியை சேர்நதவர் அன்பு, 45. ஹாலோ பிளாக் சிமின்ட் கற்கள் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஜெய்ஸ்ரீ என்ற மனைவியும், ரோஷன், 14, நிஷாந்த், 10, என இரு மகன்கள் உள்ளனர்.
மகன்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று காலை வீட்டின் அருகே உள்ள ஹாலோ பிளாக் கற்கள் செய்யும் இயந்திரத்தை நிஷாந்த் தொட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட அன்பு, நிஷாந்தை காப்பாற்ற முயன்றார்.
இதில், இருவருரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அன்பு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நிஷாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.