போலீஸ் அலட்சியத்தால் திணறிய அண்ணா சாலை
சென்னை :நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்தில் ஹோலி பண்டிகை நடத்த அனுமதி கொடுத்த போலீசார், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் நகர வழியின்றி மிகவும் திணறிப்போயினர்.
நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெரிசலில் சிக்காமல் வாகன ஓட்டிகள் செல்லும் வகையில், சென்னை போக்குவரத்து போலீசார், மாற்றங்களை அமல்படுத்துவது வழக்கம்.
ஆனால், நேற்று தனியார் அமைப்பு சார்பில் நேற்று காலை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் ஹோலி கொண்டாட்டம் நடந்தது.
இதற்கு அனுமதி அளித்த போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போக்குவரத்து மாற்றம் எதையும் செய்யாமல் விட்டு விட்டனர்.
அண்ணாசாலை நந்தனம் – சைதாப்பேட்டை பகுதியில், மேம்பாலத்திற்கான துாண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் சாலை மிகவும் குறுகலாகிவிட்டதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாகவே செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், ேஹாலி பண்டிகை நிகழ்ச்சியில், நடிகை சன்னி லியோன் பங்கேற்றார். இதையறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்திற்கு படையெடுத்தனர்.
இதனால், அண்ணாசாலை வழியாக பாரிமுனை நோக்கி சென்ற வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கிண்டி நோக்கி சென்ற வாகன ஓட்டிகளும் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
கிண்டியில் இருந்து எல்.ஐ.சி., வந்தடைய ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஏற்பட்டது. அவசர சேவை வாகன ஓட்டுநர்களும், குறிந்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.
திடீர் நெருக்கடியை எதிர்பார்க்காத போக்குவரத்து போலீசாரும் செய்வதறியாமல் தவித்தனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பண்டிகை, நிகழ்வுகளுக்கு அனுமதி கொடுப்பதில் தவறில்லை. அதற்கேற்ப, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறியதால்தான், இந்த அளவுக்கு நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை வந்தது.
தற்போது தேர்வு நடக்கும் நேரம். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் நெரிசலில் சிக்கினால், அவர்களின் எதிர்காலம் பாலாகிவிடும் என்பதைக் கூட, போலீசார் உணரவில்லை, இனிமேலும், இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொஞ்ச நேரம்தான் நெரிசல்
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில், 3,000 பேர் பங்கேற்றனர். பொதுவாக, 10,000 பேர் வருவதாக இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்துவோம்.
தற்போது அண்ணாசாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இனி வரும் நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
– பண்டி கங்காதர்
போக்குவரத்து இணை கமிஷனர்