அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கிய மூவர் கைது
சென்னை, தேனாம்பேட்டை, நளான் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 46; அ.தி.மு.க., நிர்வாகி. கடந்த 11ம் தேதி அதிகாலை, ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் கீழே, சைக்கிளில் டீ விற்பனை செய்தவரிடம் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, டீ வியாபாரிக்கும், அவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த மற்ற மூவர், சதீஷ்குமாரிடம் டீ வியாபாரியிடம் தகராறு செய்வது குறித்து தட்டிக்கேட்டுள்ளனர்.
பின், சிறிது நேரத்திலேயே, மீண்டும் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து, சதீஷ்குமாரை தலைக்கவசத்தால் தாக்கி, மூவரும் தப்பினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சதீஷ்குமார், 24, அஜித்குமார், 28, அரவிந்த், 24, ஆகிய மூவரையும், நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அரவிந்த், சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாக கொசு மருந்து அடிக்கும் வேலை பார்த்து வருவதும், சதீஷ்குமார், அஜித்குமார் ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் விசாரணையில் தெரியவந்தது.