குளத்தில் ஆக்கிரமித்து கட்டிய நான்கு கடைகளுக்கு ‘ ‘சீல்
ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தில், 27 குளங்கள் உள்ளன. இதில், 15 குளங்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டன.
மீதமுள்ள குளங்களில் பாதி, கால் பங்கு குளமாகவும், மீதமுள்ள இடங்கள், வீடு, கடைகள் என, ஆக்கிரமிப்பில் உள்ளன.
நீதிமன்றம் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக, வணிக பயன்பாட்டு நோக்கில் ஆக்கிரமித்து கட்டிய கடைகளை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இ.சி.ஆரை ஒட்டி உள்ள தீர்த்தங்கேணி குளத்தை ஆக்கிரமித்து, 7,500 சதுர அடி பரப்பில் நான்கு கடைகள் கட்டப்பட்டன. மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியும், கட்டுமானப் பணியை நிறுத்தவில்லை.
இந்நிலையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த நான்கு கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அடுத்தகட்டமாக கடைகளை இடித்து குளமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.